புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ளது ஆதிபட்டினம். இந்த பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் மகன் இப்ராம்ஷா (வயது 38). மீனவரான இவரும், இவரது குழுவினர் 20 பேர் இன்று (30.12.2024) காலை 8 மணியளவில் கோடியக்கரை பகுதியில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையை விரித்துவிட்டு கரையில் நின்று கரைவலை இழுத்துள்ளனர். காலை 10.30 மணிக்கு வலை கரைக்கு வந்து சேர்ந்துள்ளது. அப்போது வலையில் சிக்கியுள்ள மீன்களைச் சேகரிக்க வலை இழுத்த மீனவர்கள் சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மீன் வலையில் இடுப்பிலும், காலிலும் கல் கட்டப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் வலையில் சிக்கி இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மணமேல்குடி கடலோர காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி கடலோர காவல் ஆய்வாளர் (பொறுப்பு) மஞ்சுளா மற்றும் போலீசார் கடற்கரைக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது சடலமாகக் கிடந்த இளைஞரின் வலது கையில் விஜய் என்றும் பாதி அழிந்த நிலையில் செல்வம் என்றும் பச்சை குத்தப்பட்டிருந்தது.
மேலும் அந்த இளைஞர் அணிந்திருந்த சட்டை காலரில் உள்ள டைலர் கடை ஸ்டிக்கரில் சேகர் கோட்டைப்பட்டனம் என்று இருந்துள்ளது. இந்த தடயங்களைச் சேகரித்த பிறகு சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சட்டை காலரில் உள்ள டைலர் கடை ஸ்டிக்கர் கோட்டைப்பட்டினம் என்று உள்ளதால் கோட்டைப்பட்டினம் சுற்றியுள்ள கிராமங்களில் யாரேனும் இளைஞர் காணாமல் போய் உள்ளனரா என்று விசாரணை செய்து வருகின்றனர்.