கடந்த 50 நாட்களாக நடக்காமல் இருந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் டாஸ்மாக் கடைகள் திறந்த பிறகு மீண்டும் தலைதூக்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள ஒரு கிராமம், முழுமையாக விவசாய கூலி தொழிலாளிகள் நிறைந்த கிராமம். குடிதண்ணீருக்காக அப்பகுதி மக்கள் அந்தப் பகுதியில் உள்ள நீர்நிலையில் ஊற்று தோண்டிதான் தண்ணீர் எடுத்துச் சென்று குடிக்கிறார்கள்.
இன்று காலை அதே கிராமத்தை சோ்ந்த அந்தப் பகுதியில் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனியாக குடிதண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பிவரவில்லை என்று பெற்றோர் தேடிச் சென்றபோது அந்தப் பகுதியில் உள்ள ஒரு தைலமரக்காட்டில் மயங்கிய நிலையில் அலங்கோலமாக கிடந்துள்ளார்.
அவரை மீட்ட உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்து சென்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், 4 தனிப்படைகளை அமைத்து மாணவியை இப்படி செய்தவர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் யார், இது கூட்டான முயற்சியா அல்லது தனி நபரா என்பது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.