புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "சீனாவில் கொரானா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட வேண்டும். தமிழக மாணவர்கள் 200 அங்கே சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்.
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ராணுவப் பயிற்சிப் பள்ளி நடத்தப் போவதாக வெளியான செய்தி அபாயகரமானது. முப்படை தளபதி அரசியல் பேசிய பரபரப்பே அடங்காத நிலையில், இப்போது ஆர்எஸ்எஸ் பயிற்சி நடத்துவது என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதனால் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எந்த பிரிவுகக்கான தேர்வாக இருந்தாலும் முறைகேடு நடப்பதால் இளைஞர்கள் நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள். இந்த சம்பவத்தில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் முழுமையாக செயல்படுவது தெரிகிறது. அரசியல்வாதியின் பின்னால் தான் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களை உடனடியாக மக்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.
நெடுவாசலில் 2017ல் ஹைட்ரோகார்பன் போராட்டம் தொடங்கியது. அப்போது வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நெடுவாசல் பிரதிநிதிகளை டெல்லி வரை அழைத்து சென்று மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்று உறுதியை வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்புவதற்கு முன்பு இரண்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது மத்திய அரசு.
தற்போது சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை மக்கள் கருத்து தேவை இல்லை என்று அறிவிப்பு செய்துள்ளது. இதனால் டெல்டாவில் போராட்டங்கள் தொடங்கியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மௌனம் காத்து வருகிறார். பொது அறிவிப்பு செய்து அதற்கான காரணங்களை சொல்லவேண்டும் மௌனம் காத்து தப்ப முயலக்கூடாது.
ஜனவரி 26ந் தேதி நடந்த முடிந்த கிராமசபை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் வேண்டாம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகள் மதிப்பு கொடுக்க வேண்டும் இல்லை என்றால் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து செல்வோம்.
தந்தை பெரியார் இல்லை என்றால் நடிகர் ரஜினி இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது என்பதை உணரவில்லை. இரட்டைவேடம் போட்டு மோடியை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய படங்களைப் பார்ப்பதற்கு திரையரங்குகளில் ரசிகர்களை விட மூட்டைப்பூச்சிகளே அதிகமாக இருப்பதாக தெரியவருகிறது.
தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இதை செய்ய வேண்டியது மாநில அரசுதான். ஆனால் அரசாங்கம் தவறி வருகிறது எடப்பாடி பேச மறுக்கிறார். அவர்கள் கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானம் போட்டிருக்கிறது பாஜக தவிர மற்ற அனைவரும் தமிழில் குடமுழுக்கு என்பதை ஆதரிக்கிறார்கள். தமிழில் மட்டுமே குடமுழுக்கு செய்ய வேண்டும். தமிழ்நாட்டு சாமிகளுக்கு தமிழில் சொல்வது தான் புரியும். அதனால் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் நடத்துவது எப்போது என்பது தெரியாது. இரண்டு பழனிச்சாமிகளுக்கு மட்டும்தான் தெரியும். ஒன்று முதலமைச்சர் பழனிசாமி மற்றொன்று தேர்தல் ஆணையர் பழனிச்சாமி இருவருக்கு மட்டும்தான் தெரியும். சேலத்தில் ஒரு ஒன்றியத்தில் தலித் உறுப்பினரே ஒன்றிய சேர்மனாக வர முடியும் என்ற நிலையில் அங்கே 2 திமுக உறுப்பினர்கள் தலித்துக்கள் வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தல் நாளில் மற்ற யாரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஒரு தலித் ஒன்றிய பெருந்தலைவராக வருவதை முதலமைச்சர் விரும்பவில்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்." இவ்வாறு முத்தரசன் கூறினார்.