புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 400 குழந்தைகள் வரை பிரசவமாகிறது. பல வருடங்களாக சிசு மரணம் இல்லாத மருத்துவமனை என்ற சிறப்பும் இம்மருத்துவமனைக்கு உள்ளது.
இந்த மருத்துவமனையில் குழந்தைகள் வார்டுக்கு 20 மீட்டர் தூரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா வார்டு அமைக்கப்பட்டு 18 பேரை அனுமதித்தனர். குழந்தைகளைப் பாதிக்கும் அதனால் கரோனா வார்டை மாற்ற வேண்டும் என்று இரவிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
அடுத்த நாளே கரோனா வார்டில் இருந்தவர்கள் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அதன் பிறகும் அதே பகுதியில் கரோனா வார்டு அமைக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. கரோனா சிகிச்சையை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் குழந்தை வார்டுக்கு அருகில் வைக்க வேண்டாம் என்று தான் கோருகிறோம் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
அப்போது பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அதிகாரிகள் கரோனா அறிகுறி உள்ளவர்களை மட்டும் தங்க வைத்துப் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சமாதானம் கூறப்பட்டது. இந்த நிலையில் அறந்தாங்கி மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அறந்தாங்கி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (15/07/2020) அறந்தாங்கி வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், பிரசவத்திற்காக வந்த போது அவருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் (16/07/2020) இரவு அந்த கர்ப்பிணிக்கு பிரவச வலி ஏற்பட்டதால் வியாழக்கிழமை இரவு மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தனர்.
நேற்று (17/07/2020) கரோனா பரிசோதனை முடிவு வெளிவந்த நிலையில் நேற்று முன்தினம் (16/07/2020) இரவு பிரவசம் பார்க்கப்பட்ட கர்ப்பிணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை வட்டாரமே அதிர்ச்சியடைந்தது. உடனடியாக வார்டு பகுதியில் மருந்து தெளிக்கப்பட்டாலும் 50- க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளுடன் இருப்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மருத்துவக்குழுவினர் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பிரசவித்த பெண்ணை புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையறிந்த அறந்தாங்கி நகர மக்கள் இப்படி ஒரு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதால்தான் கரோனா வார்டு வேண்டாம் என்று சொன்னோம் என்கிறார்கள்.