உயிர் காக்கும் உழவுத் தொழிலுக்குப் பாதுகாப்புக் கொடு! விவசாயக் கடன்களை ரத்து செய்து புதிய விவசாயக்கடன் வழங்கு என்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிக்களுக்கு இதுவரை வழங்கிவந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதே! மின்துறையைத் தனியார்மயமாக்கும் புதிய மின்சார திருத்தச்சட்டம் 2020-ஐ திரும்பப் பெற வேண்டும். கடைமடைப் பாசன வாய்க்கால்களைப் போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்காதே. விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணம் ரூ 7,500 வழங்கிடு, காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனே செயல்படுத்து என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்த அளவிலேயே கலந்து கொண்டு கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இந்திய விவசாயிகள் சங்க உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான மு.மாதவன் தலைமையில் நகரச் செயலாளர் தமிழ்மாறன், சி.பி.எம். ராஜா உள்பட 11 பேர் சமூக இடைவெளியோடு கட்சிக்கொடி, கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் 11 பேர் மீதும் அதே போல மேற்பனைக்காடு கிராமத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த 6 பேர் மீதும் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதே காவல் சரகத்தில் கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம் உள்ளிட்ட கிராமங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே போல புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தாலும் வழக்குப் போடுவது வியப்பாக உள்ளது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தடுத்து பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என்கின்றனர் விவசாயிகள்.