ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கள்ளச்சாராயம் தலைதூக்கத் தொடங்கியுள்து. ஆனால் இளைஞர்கள் மட்டுமின்றி பலரும் கள்ளச்சாராயத்தை நாடவில்லை என்பதால் ஊரடங்கு காலத்தில் மது குடிப்போர் எண்ணிக்கை குறைந்து சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், குடுப்ப பிரச்சனைகள் முற்றிலும் குறைந்திருந்தது.
இந்த ஊரடங்கு காலத்தில் குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைத்த பலர் உணவுப் பொருளை அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இன்னும் பலர் தங்களின் பழைய தொழிலான சாராயம் காய்ச்சுவதை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தினசரி ஏராளமான இடங்களில் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு அதிகபட்சமக ரூ 4.5 கோடிகள் மொய் வாங்கி பரபரப்பாக பேசப்பட்டவரான வடகாடு, கூட்டாம்புஞ்சை கிருஷ்ணமூர்த்தியின் தோட்டத்தில் சாராய ஊறல்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி வடகாடு போலீசார் சென்று சோதனை செய்த போது ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
இது சம்மந்தமாக கிருஷ்ணமூர்த்தி மற்றும் செட்டியார் தெரு செல்வம் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ 4.5 கோடி மொய் வாங்கியவர் தோட்டத்தில் சாராய ஊறல் அழிக்கப்பட்ட தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.