புதுக்கோட்டையில் 14 ந் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழாவில் தினம் தினம் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்து பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களை பார்த்து வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் மாலை, இரவு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
ஞாயிறுக்கிழமை நடைபெற்ற மாலை நிகழ்விற்கு மருத்துவர் பி.தனசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.கார்த்திக்தொண்டைமான், மருத்துவர் அனிதா தனசேகரன், செ.சுந்தரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, ஏ.சந்திரபோஸ், சபா ரத்தினம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் நா.அருள்முருகன் எழுதிய ‘நேமிநாதம் காலத்தின் பிரதி’ என்ற நூலை பேராசிரியர் பா.மதிவாணன் வெளியிட, அருட்பா சரவணன் பெற்றுக்கொண்டார். புதுக்கோட்டை மண்ணில் பிறந்து ஓயியத்துறையில் மிகப்பெரிய சாதனை படைத்த மாருதி புத்தககத் திருவிழாவில் கவுரவிக்கப்பட்டார்.
திங்கள் கிழமை காலை அதிக அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்கள் புத்தக அரங்குகளைப் பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை தேடிச்தேடி வாங்கினர்.
விண்வெளி அதிசயத்தை விளக்கும் கோளரங்கம், தமிழனின் தொன்மையை விளக்கும் கீழடி அரங்குகளையும் பார்வையிட்டு அதிசயித்தனர். சிறப்பு நிகழ்வாக மாணவ, மாணவிகளுடன் உரையடிய இந்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் பதிலளித்தார்.
மாலையில் நடைபெற்ற விழாவில்... நாசா செல்லும் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் பள்ளி மாணவி க.ஜெயலெட்சுமி, புதிய அறிவியல் சாதனைக்காக புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி இளம் விஞ்ஞானிகள் ஜெ.ஹரீஸ்ராஜ், எஸ்.நாகராஜ், ‘தமிழ் இலக்கியத்தில் கணிதம்’ என்னும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் வீ.கவியரசு ஆகியோரைப் பாராட்டி இந்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், அறிவியல் பலகையின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.