சுய ஊரடங்கு உத்தரவையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கரோனா வைரஸ் பரவாமல் இருக்க பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் சுய ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தி இருந்தார். மேலும் புதுச்சேரி மாநில மக்கள் பாரத பிரதமரின் அறிவுறுத்தலின் படி இன்று தங்களின் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநில முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி புதுச்சேரியில் பால் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்து கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
கடற்கரை சாலையில் வரும் 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளதால் கடற்கரை சாலை காலியாக உள்ளது. மேலும் இன்று காலை கிறிஸ்துவ தேவாலயங்களில் வாராந்திர சிறப்பு தொழுகை நடத்தப்படவில்லை. பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படவில்லை.
சுய ஊரடங்கை மதித்து புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் முடங்கி உள்ளதால் புதுச்சேரி பேருந்து நிலையம் மற்றும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேசமயம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.