மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி சார்பில் அண்ணா சதுக்கம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம், பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை மற்றும் தி.மு.க கூட்டணிக் கட்சி உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி நிறைவு உரையாற்றினார். அப்போது வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசிய அவர், புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரால் ஏற்படும் தொல்லைகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் பேசினார். அதனைத் தொடர்ந்து திடீரென வேளாண் சட்ட நகலைக் கிழித்தெறிந்து வேளாண் சட்டத்திற்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் உட்பட கட்சி நிர்வாகிகள் அனைவரும் குளிர்பானம் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.