Skip to main content

3 மாதம்தான் டைம்... இல்ல பதவியை ராஜினாமா செஞ்சிடுவேன்... - அமைச்சர் கந்தசாமி அதிரடி பேச்சு!

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

தனது கோரிக்கைகளை 3 மாதத்தில் நிறைவேற்றவில்லை என்றால்  பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 

puducherry minister kandasamy speech

 



புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அரசு செயலாளர் ஆலிஸ்வாஸ் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கவர்னர் கிரண்பேடி கலந்துகொண்டார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் கந்தசாமி, "நமது முதலமைச்சரும், கவர்னரும் இணைந்து செயல்படுவதில் எங்கோ ஓரிடத்தில் தவறு உள்ளது. இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். ஏனெனில் எனது துறைதான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளமில்லை. சுகர்மில் ஓடவில்லை. ரோடியர், பாரதி, சுதேசி மில்கள் மூடப்பட்டுள்ளன. அங்கன்வாடியில் 4 ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. வேலையில்லாததால் இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

 

puducherry minister kandasamy speech

 



நாங்கள் இலவச அரிசி போடவேண்டும் என்கிறோம். கவர்னர் பணம் போடவேண்டும் என்கிறார். அரிசி வழங்காத 22 மாதத்துக்கும் பணம் வழங்க கவர்னரும், முதலமைச்சரும் நிதி தர வேண்டும். அதற்கான நிதியை தயார் செய்யவேண்டும்.  இதுபோன்ற எனது கோரிக்கைகளை 3 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற கவர்னர் ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லாவிட்டால் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை சந்தித்து எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். அதன்பின் மக்களோடு மக்களாக இருந்து போராடுவேன். ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சரையும் பார்ப்பேன். இதை நான் அரசியலுக்காக பேசவில்லை. எதையும் செய்ய முடியாமல் நான் அமைச்சராக இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது" என்றார்.

அதைத்தொடர்ந்து தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு ஒன்றை ஆளுநர் கிரண்பேடியிடம் அமைச்சர் கந்தசாமி வழங்கினார். முன்னதாக தனது பேச்சினை மொழி பெயர்த்து கவர்னரிடம் கூறுமாறு கவர்னரின் தனிச்செயலாளர் ஸ்ரீதரனிடம் கந்தசாமி தெரிவித்தார். அதன்படி அமைச்சர் கந்தசாமி பேசப்பேச ஸ்ரீதரன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கிரண்பேடியிடம் கூறினார்.

பொது வெளியில் அமைச்சர் ஒருவர் விரக்தியில் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என கூறியது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்