கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனப் பெயரிடப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) நேற்று (30-01-24) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. பயணிகளின் வசதிக்காக தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் போது விழுப்புரம் கோட்ட பேருந்துகள் மட்டும் தாம்பரம் வரை இயக்கப்படும்.
அதே சமயம் மீண்டும் தென்மாவட்டங்களுக்கு கிளம்பும் அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது. மேலும் சென்னையில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாகவும், பூவிருந்தவல்லி வழியாக வேலூர், திருப்பத்தூர், ஓசூர் வரை செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகம் முழுவதும் செல்லும் அரசு பேருந்துகளுக்கான நடைமேடை எண்களை நேற்று (30-01-24) அறிவித்தன.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்க டெண்டர் வெளியிட்டுள்ளது. அதில், பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் மையப்பகுதிக்கு 400 கி.மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்படவுள்ளது. மேலும், நகரும் படிக்கட்டிகள் மற்றும் மின் தூக்கி வசதியுடன் இந்த நடைபாதை அமைக்கப்படவுள்ளது. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டெண்டருக்கு பிப்ரவரி 14ஆம் தேதி கடைசி நாள் ஆகும் என்று தெரிவித்துள்ளது.