கடலூர் மாவட்டம், திட்டக்குடி - கருவேப்பிலங்குறிச்சி நெடுஞ்சாலையில் உள்ள மாளிகை கோட்டம் ஊராட்சி பகுதியில் உள்ள பாபுஜி நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய திட்டப்பணிகளான கழிப்பறை வசதி, சாலை, குடிதண்ணீர் வசதி ஆகியவற்றை நிறைவேற்றி தரக்கோரி பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் கண்டுகொள்ளாததால் நேற்று சாலை மறியல் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இந்த தகவல் அறிந்த திட்டக்குடி வட்டாட்சியர் கார்த்திக், சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய் துறையினர் காவல் துறையினர் போராட முயன்ற மக்களை திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த பேச்சுவார்த்தையின் போது நல்லூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தகவல் அளித்தும் யாரும் கலந்து கொள்ளவில்லை.
கிராம ஊராட்சிகளில் முக்கியமான திட்டப்பணிகளை நிறைவேற்றக்கூடிய அதிகாரம் படைத்தவர்களான ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு வராதது கிராம மக்களை கோபத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அந்த கிராம மக்கள், பெண்ணாடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறை இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, தாசில்தார் கார்த்திக், சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.