தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டன.
எனினும், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் இணைய வழியில் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது. கடந்த ஜன. 19- ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கின. பின்னர், பிப். 8- ஆம் தேதி முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. குறுகிய காலத்திற்கு ஏற்ப பாடச்சுமையும் வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடவடிக்கைகளை, தேர்வுத்துறை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.
முதல்கட்டமாக, பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களின் முழு விவரங்களையும் தவறாமல் கணினியில் பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தும்படி, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு (சிஇஓ) உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இப்பணிகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளன. பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் இப்பணிகளை முழுமையாக முடிக்காமல் அலட்சிமாக இருந்தனர்.
இதனால் பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தாமதத்தால் அதிருப்தி அடைந்துள்ள தேர்வுத்துறை, விரைவாக அனைத்து மாணவர்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட சி.இ.ஓ.க்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.