திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி பகுதியில் தென் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. அந்த பகுதியில் இரவு நேரத்தில் தொடர்ந்து வழிப்பறி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு மூன்று இளைஞர்கள் அதே பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு அக்கரைப்பட்டி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் பதுங்கி இருந்துள்ளனர். இதனை அறிந்த அக்கரைப்பட்டி கிராம மக்கள் காட்டு பகுதிக்குள் நுழைந்து அவர்களை பிடிக்க முயற்சித்தனர்.
அப்போது மூவரில் இருவர் தப்பிக்க ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். அவரை பிடித்த கிராம மக்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர், திருவானைக்காவல் வடக்கு 5ம் பிரகாரம் பகுதியைச் சேர்ந்த பரத்குமார்(24) என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பரத்குமாரை மக்கள் கிராம கோவிலில் கட்டிவைத்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதற்குள் திருடன் பிடிபட்ட சம்பவம் அக்கரைப்பட்டியின் பக்கத்து கிராமத்திற்கும் தெரியவந்துள்ளது. அதனால், அந்தக் கிராம மக்களும், அந்தக் கோவிலில் கூடியுள்ளனர். இதனால் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அதேசமயம், காவல்துறையினரும் அந்தப் பகுதிக்கு வந்தனர். பின் கட்டிவைத்திருந்த திருடனை மீட்டு காவல்துறையினர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அப்பகுதியில் இருந்த மக்கள் ஒன்று திரண்டு அழைத்துச் செல்ல வழிவிடாமல் அந்த இளைஞனை அனைவரும் தாக்கினர். இதனால் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது, காவல்துறை வாகனத்தின் பின்புறம் கண்ணாடி உடைந்தது. பின் காவல்துறையினர் அந்தக் கிராம மக்களிடம் இருந்து திருடனை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.