ஆன்லைன் விளையாட்டு யூடியூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் பப்ஜி மதனை காவல்துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில், தலைமறைவான அவரை நேற்று (18.06.2021) தருமபுரியில் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சென்னை கொண்டுவரப்பட்ட பப்ஜி மதனிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆபாசமாகப் பேசி வீடியோ பதிவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்த மதன், வருமான வரி செலுத்தாதது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வருமான வரி செலுத்தவில்லை. இது தொடர்பான தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஆவணங்களுடன் ஒப்படைக்க கூடிய நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
மதனின் மனைவி கிருத்திகா பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் 4 கோடி ரூபாய் பணம் இருந்த நிலையில், வருமான வரி செலுத்தாதது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் சென்னை பெருங்களத்தூரில் 45 லட்சம் ரூபாயில் சொகுசு வீட்டையும் மதன் வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் மதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பண மோசடி புகார்கள் வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் ஆதரவற்றவர்களுக்கு உதவுவதாகக் கூறி கூகுள் பே மூலம் மதன் பணத்தை வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மதனிடம் பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று மதனை ஆஜர்படுத்துகிறது போலீஸ்.