பினாமி, தர்மயுத்தம் புகழ் EPS,OPS கட் அவுட்: அவசர ஊர்திக்கு கூட வழி விடாமல் பந்தா: பாமக கண்டனம்
பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தர்மயுத்தம் புகழ் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரை வரவேற்று அமைக்கப்பட்டிருந்த கட் அவுட்களால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மக்களின் கோபத்தை உணர்ந்து ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். ஒருவேளை தானாக திருந்த மறுத்தால், மக்கள் விரைவிலேயே தண்டனை கொடுத்து திருத்துவார்கள் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது,
மக்களுக்கு தொண்டு செய்ய முடியவில்லை என்றாலும், தொல்லை செய்வதில் குறையேதும் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் தமிழக ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் சென்னை முதல் வண்டலூர் வரை ஆட்சியாளர்கள் நடத்திய அட்டகாசங்கள் மக்களை முகம் சுழிக்க வைத்திருக்கின்றன. இவை கண்டிக்கத்தக்கவை.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வண்டலூரில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக ஆளுங்கட்சி சார்பில் அளவற்ற அத்துமீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. சென்னை தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரை சாலையின் இரு ஓரங்களிலும் பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தர்மயுத்தம் புகழ் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரை வரவேற்று பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் வைக்கப்பட்டிருந்ததை விட அதிக உயரத்தில் இவர்கள் இருவருக்கும் வானுயர கட்&அவுட்களும் அமைக்கப்பட்டிருந்தன.
சாலையோர நடைபாதைகளை அடைத்து 10 அடிக்கு ஒரு பதாகை வீதம் அமைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் நடைபாதைகள் மீது நடந்து செல்ல முடியாமல் சாலைகளில் இறங்கி நடந்து சென்றனர். ஏற்கனவே சாலைகளின் இருபுறமும் தலா 5 அடி வீதம் பதாகைகள் நீட்டிக் கொண்டிருந்த நிலையில், அதையும் தாண்டி பொதுமக்கள் நடந்து சென்றதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வட சென்னை, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை ஆகியவற்றை இந்த சாலையுடன் இணைக்கும் சாலைகளிலும் இதே நிலை தான். சில இடங்களில் சாலைகளின் நடுவே அமைக்கப்பட்டிருந்த வளைவுகள் சரிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். பதாகைகளை அமைக்க பல கி.மீ தொலைவுக்கு சாலைகள் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற விழாக்களுக்காக இத்தகைய அத்துமீறல்கள் நடப்பது வழக்கம். ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்வதாக காட்டிக் கொள்வதற்காகவோ, என்னவோ ஜெயலலிதா காலத்தில் இருந்ததை விட இரு மடங்கு அளவுக்கு அத்துமீறல்களும், ஆடம்பரங்களும் கொடி கட்டி பறந்தன. ஜெயலலிதா காலத்தில் அனுபவித்ததை விட மிக மோசமான தொல்லைகளை இந்த விழாவுக்காக பொதுமக்கள் அனுபவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பல்வேறு இடங்களில் ‘‘ இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இடம்... உங்களின் விளம்பரத்திற்கான இடமல்ல’’ துண்டு காகிதங்களில் எழுதி எடப்பாடி பழனிச்சாமி வாய் மீதும், ஓ.பன்னீர்செல்வம் வாய் மீதும் ஒட்டிச் சென்றிருக்கிறார்கள். மக்களின் இக்கோபம் நியாயமானது. நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்தால் மக்களின் இந்த கோபத்தை உணர்ந்து திருந்துவர். ஆனால், இவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது.
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற நாளிலிருந்து அவரது செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ்நாட்டு மக்களும் இதையெல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். முதலமைச்சராக பதவியேற்றதற்கு பிந்தைய 197 நாட்களில் சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு திட்டத்தையும் பழனிச்சாமி செயல்படுத்தவில்லை. அதேநேரத்தில், நள்ளிரவிலும் குடை பிடித்துச் செல்வது போன்ற வாழ்க்கை முறைக்கு அவர் மாறிக் கொண்டிருக்கிறார் என்பதை மட்டும் உணர முடிகிறது. எடப்பாடி பழனிச்சாமி எந்த இடத்திற்கு சென்றாலும், அதற்கு 10 மணி நேரங்கள் முன்பாகவே அந்த பகுதியில் காவல்துறையினரை பாதுகாப்புக்கு நிறுத்தி பந்தா காட்டுவது, அவசர ஊர்திக்கு கூட வழி விடாமல் போக்குவரத்தை நிறுத்தி வைத்து மக்களின் சாபங்களை வாங்கிக் கொள்வது என முதலமைச்சரின் ஆடம்பரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள பன்னீர்செல்வமும் எடப்படி பழனிச்சாமிக்கு எந்த வகையிலும் சளைத்தவராகத் தெரியவில்லை. கடற்கரைச் சாலையில் சென்ற வழித்தடம் கூட தெரியாமல் ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து தியானம் செய்த பணிவையும், சாலைகளை அடைத்து பதாகை அமைத்து ஊர்வலம் சென்று மகிழும் பந்தாவையும் ஒப்பிட்டுப் பார்க்கும் மக்கள் இது தான் தர்மயுத்தம் கொடுத்த பலனா? என்று கேட்கிறார்கள். மக்களின் கோபத்தை உணர்ந்து ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும். ஒருவேளை தானாக திருந்த மறுத்தால், மக்கள் விரைவிலேயே தண்டனை கொடுத்து திருத்துவார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.
படங்கள்: அசோக்குமார்