கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கல்மேடு கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட போர்வெல் மூலம் குடிநீர் கிடைத்து வந்தது. இந்த போர்வெல் கடந்த 20 நாட்களுக்கு முன் பழுதடைந்தது.
இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்கு மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்துள்ளனர். குடிநீர் எடுப்பதில் சிரமம் அடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன் தலைமையில் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் காலி குடங்களுடன் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்லையா, நெடுஞ்சேரலாதன், சிவராமன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மேற்கண்ட கோரிக்கை குறித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர் தகுந்த நடவடிக்கை விரைவில் எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.