கடந்த டிசம்பர், 29 அன்று மேலப்பாளையத்தில் நடந்த எஸ்.டி.பி.ஐ. மாநாட்டில் கலந்து கொண்ட மூத்த தமிழ் பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை விமர்சித்துப் பேசியதாக பா.ஜ.க.வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் இன்று அதிகாலை பெரம்பலூரில் கைது செய்யப்பட்டார் நெல்லை கண்ணன்.
பின்னர் பாளை அரசு மருத்துவமனையில் மருத்துவ சோதனைக்குப் பிறகு மதியம் 1.30 மணிவாக்கில் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை கண்ணன் தரப்பில் வழக்கறிஞர் பிரம்மா ஜமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மேலப்பாளையம் சந்தைத் தெருவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கோட்டூர் மஸ்தான் தலைமையில் கண்டனப் போராட்டம் நடந்தது. திரளானோர் கலந்து கொண்ட கூட்டத்தில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியதுடன் அவர் மீது பதியப்பட்ட வழக்கினை திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது.