சிதம்பரம் அருகே உள்ள பெரியகுமட்டி ஊராட்சி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இந்த ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவராக மரகதம் உள்ளார். இந்த நிலையில் இந்த ஊராட்சியில் பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்வதற்கு இளைஞர்கள், இளம்பெண்களைக் கொண்ட கிராம வளர்ச்சிக்குழு என்று ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் 25 பேர் உறுப்பினராக உள்ளனர். இதன் தலைவராக ஞானகுருவும், செயலாளராக அன்புவும், பொருளாளராக சுதாவும் உள்ளனர். இக்குழுவினர் ஊராட்சியில் உள்ள 7 குளங்களை அரசை எதிர்பார்க்காமல் தாங்களே தூர்வாருவது என்றும் இதன் மூலம் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் மற்றும் ஊராட்சியில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று முடிவு செய்தனர்.
அதனடிப்படையில் ஊரின் மேலத்தெருவில் உள்ள நத்தவனம் குளத்தை ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் மற்றும் கிராம வளர்ச்சிக்குழுவினர் மண்வெட்டி, கடப்பாறைக் கொண்டு மண்ணை அள்ள பாண்டுடன் களமிறங்கினர். யாரையும் எதிர்பார்த்து நிற்காமல் குளத்தில் இறங்கி தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர். குளத்தில் இருந்து குப்பைகளை அகற்றினர். அதனைத் தொடர்ந்து மண்ணை வெட்டி கரைப்பகுதியில் போடும் பணியில் ஈடுபட்டுனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் கூறுகையில் எங்களது ஊராட்சியில் கிராம வளர்ச்சி குழு என்று உருவாக்கி, கிராமத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது ஊராட்சியில் உள்ள குளங்களை தூர் வார முடிவு செய்து கிராம மக்களின் ஆதரவுடன் நந்தவனம் குளத்தைத் தூர் வார ஆரம்பித்துள்ளோம். இதனைத் தொடர்ந்து அனைத்து குளத்தையும் தூர் வாருவோம். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதைச் செய்து வருகிறோம். இதன் மூலம் எங்கள் கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் இருக்காது என்றார்.
இது குறித்து கிராம வளர்ச்சி குழுவினர் கூறுகையில் நாங்கள் தற்போது குளத்துக்கு பணத்தை எதிர்பார்க்காமல் எங்களது உழைப்பை பயன்படுத்தி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து குளத்தை தூர் வாரி வருகின்றனர். இது போன்ற விழிப்புணர்வு மற்ற கிராம மக்களுக்கும் வர வேண்டும், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளில் ஒன்று குடிநீராகும். கிராமத்தல் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கவே முதல் கட்டமாக இந்தப் பணியை கையில் எடுத்துள்ளோம். இது போல பல்வேறு நலப்பணிகளை செய்து எங்கள் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக உருவாக்குவோம், மாவட்ட நிர்வாகம் குளத்தைச் சுற்றி தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.