மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்கியது. தற்பொழுது ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். நிகழ்வில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழக ஆளுநர், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தற்பொழுது விழாவானது நாட்டுப் பண் உடன் தொடங்கியது.
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டை நடத்துவதன் மூலம், இந்தியாவிற்கு இது பெருமைமிகு தருணம். இந்த விழாவிற்காக அழைப்பிதழுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நேரில் அழைக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் இடையில் எனக்கு ஏற்பட்ட கரோனா தொற்று காரணமாக நேரில் செல்ல முடியாத சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த என்னை நலம் விசாரிப்பதற்காக பிரதமர் தொடர்பு கொண்டார். என்னை நலம் விசாரித்த அவரிடத்தில் எனது நிலையை நான் விளக்கினேன். பிரதமர் பெருந்தன்மையோடு சொன்னார் 'நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் நான் நிச்சயம் கலந்து கொள்வேன்' என்று. இந்த விழாவானது இந்தியாவிற்கே பெருமை தரக்கூடிய விழா எனப் பிரதமர் குறிப்பிட்டார். அந்த வகையில் அந்த வகையில் பிரதம நரேந்திர மோடி இங்கே வருகை புரிந்து இருக்கிறார்.குஜராத்தில் முதலமைச்சராக பிரதமர் மோடி இருந்தபோது சர்வதேச செஸ் திருவிழாவை நடத்திக் காட்டினார்.
ரஷ்ய நாட்டில் தான் இந்த செஸ் போட்டி முதலில் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டது. கரோனா மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக ரஷ்யாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. வேறு எந்த நாட்டில் போட்டியை நடத்தலாம் என ஆலோசனைகள் நடந்ததை அறிந்து இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு வருமானால் தமிழ்நாட்டில் நடத்தும் வாய்ப்பை நாம் பெற வேண்டுமென்று அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதுபற்றி நமக்கு தகவல்கள் கிடைத்தன. கடந்த மார்ச் 16ஆம் நாள் இதற்கான முறையான அறிவிப்பை நான் வெளியிட்டேன். இந்த விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக 18 துணைக் குழுக்களைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியது. இதுபோன்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என்பார்கள். ஆனால் நான் பெருமையோடு சொல்கிறேன் நான்கே மாதங்களில் பன்னாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்திருக்கிறது. இதற்கு காரணமான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்களையும், விளையாட்டு துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளையும், இதற்கு துணை நின்ற அனைத்து துறை அதிகாரிகளையும் நான் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக அளவில் தமிழ்நாட்டின் மீது கவனத்தைத் திருப்பும் நிகழ்ச்சியாக இன்று துவங்கியுள்ளது. இந்த போட்டி மூலமாக தமிழ்நாட்டின் விளையாட்டு துறை மட்டுமல்ல சுற்றுலாத் துறையும், தொழில் துறையும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய இருக்கிறது. இன்னும் சொன்னால் தமிழ்நாட்டினுடைய மதிப்பும், தமிழ்நாடு அரசினுடைய மதிப்பும் பெரும் அளவு இன்று முதல் மேலும் மேலும் உயரும். இந்த உயர்வு என்பது மிகச் சாதாரணமாகக் கிடைத்துவிடுவதில்லை. சரியான திட்டமிடல். கடின உழைப்பு. அதன் விளைவே இந்த உயர்வு. இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முறையாகவும், ஆசியக் கண்டத்தில் மூன்றாவது முறையாகவும் இந்த செஸ் போட்டிகள் நடந்திருக்கின்றன. கிபி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியக் கண்டத்தில் விளையாடப்பட்டு வந்த சதுரங்க விளையாட்டு தான் இன்று உலகம் முழுக்கவும் செஸ் என்ற பெயரால் பரவி இருக்கிறது. சில சில மாறுதல்களோடு உலகின் பல்வேறு நாடுகளில் சதுரங்கம் விளையாடப்பட்டு வருகிறது.
தொடக்க விழா இங்கு நடைபெற்றாலும் போட்டிகள் முழுமையாக இயற்கை எழில் கொஞ்சக்கூடிய மாமல்லபுரத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது. மாமல்லபுரம் இந்திய கட்டிடக்கலையின் அருங்காட்சியகம். அதற்கு பக்கத்தில்தான் சதுரங்கப்பட்டினம் கடலோரப் பகுதி இருக்கிறது. சென்னை பட்டணத்தை மெட்ராஸ் என்று அழைத்ததுபோல சதுரங்கப்பட்டினத்தை சத்ராஸ் என்று அழைத்தார்கள். மன்னர் காலத்திலிருந்து புகழ் பெற்ற அந்த ஊர் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த ஊரில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க சதுரங்க போட்டி நடக்க இருக்கிறது. ஒரு காலத்தில் மன்னர்கள் விளையாட்டு என்று கூறப்பட்ட செஸ் இன்று அனைத்து மக்களும் விளையாடும் விளையாட்டாக உள்ளது. மூளை சார்ந்த போர்க் கலையாகச் சொல்லப்படும் விளையாட்டு இது. அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு இல்லை. அறிவை நம்பிய விளையாட்டு. இந்த விளையாட்டினை தமிழகத்தில், இந்தியாவில் மேலும் பரவச் செய்ய இந்த போட்டிகள் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை''என்றார்.