நெல்லை மொழியில் பேசிய பேராசிரியரிடம் மாணவிகளின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜா. வரலாற்றுத் துறை உதவி பேராசிரியராக இருக்கும் இவர் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். சண்முகராஜா வழக்கம் போல் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் பேராசிரியர் சண்முகராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பானது.
இதைக் கண்ட மற்ற மாணவிகள் கூச்சலிட்டதால் பல்கலைக்கழகத்தில் இருந்த பேராசிரியர்கள் மாணவர்கள் கூடினர். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த பேராசிரியர் சண்முகராஜாவை மாணவர்கள் அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் உதவி பேராசிரியரான சண்முகராஜா நெல்லை பேச்சு வழக்கில் பேசியதால் மாணவிகள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டதும் இது குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்ததும் தெரிய வந்தது. மாணவிகளின் பேச்சை நம்பி பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்து பேராசிரியரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பின்னர் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.