விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சலூன் கடை நடத்தி வருபவர்கள் சத்தியமூர்த்தி மற்றும் மாதவன். திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு மொட்டையடிப்பதில் உறவினர்களான சத்தியமூர்த்திக்கும் மாதவனுக்கும் முன்பகை இருந்துள்ளது. கடந்த 15 வருடங்களாக சத்தியமூர்த்தி தான் அத்திருவிழாவில் முடியெடுக்கும் பணியினைச் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், இந்த வருடம் திருவிழாவில் மொட்டையடிக்கும் வேலையை தான் பார்த்துக் கொள்வதாக மாதவன் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக சத்தியமூர்த்தியின் சலூன் கடைக்குள் இருவருக்கும் வாய்த்தகராறு ஆனது. கடைக்கு வெளியில் வந்த பிறகு தகராறு பெரிதாகிவிட, முதலில் மாதவன் சத்தியமூர்த்தியின் கையில் கத்தரிக்கோலால் குத்தித் தாக்கியுள்ளார். பதிலுக்கு சத்தியமூர்த்தி இன்னொரு கத்தரிக்கோலால் மாதவனின் மார்பில் குத்தித் தாக்கியுள்ளார். இவையனைத்தும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த மாதவன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சத்தியமூர்த்தி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, மாதவனின் மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.