திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள செல்லம்புதூரில் பன்றிகளைத் தரையில் கால் படாமல் ஊர்வலமாக அழைத்துச் சென்று வினோத வழிபாடு நடத்திய கோவில் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
செல்லம்புதூர் ஸ்ரீபட்டத்தரசி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை வருடம்தோறும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டிலும் பட்டத்தரசி அம்மன் கோவிலுக்குப் பாத்தியப்பட்ட 24 மனை தெலுங்குச் செட்டியார்கள் மற்றும் கொரகையர் குலப் பங்காளிகள் இணைந்து வடுகபட்டி, சிலமலை கோவில், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து சந்தனக் கருப்பு கோவிலில் வைத்து பூஜை செய்து ஊர்வலமாக பட்டத்தரசி அம்மன் கோவிலுக்குச் சென்றனர்.
அந்தக் கோவிலில் நேர்த்திக் கடன் வைத்தவர்கள் பன்றிக் குட்டிகளை அழைத்து வந்து அதன் கால்கள் தரையில் படாதவாறு பாதைகளில் சேலைகளை விரித்து., அதன் மீது பன்றிகளை நடக்க வைத்து மேளதாளம் முழங்கிட ஊர்வலமாக அழைத்துச் சென்று விருக பூஜை நடத்தி தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.