சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சேலம் சோனா கல்லூரியில் இன்று (மார்ச் 27) பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில் மொத்தம் 1,800 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் பயிற்சிக்கு வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து தபால் வாக்குகள் இன்று காலை முதல் பெறப்பட்டு வருகிறது. காலை 10 மணிக்குத் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.
தபால் வாக்குகளைச் சேகரிக்க, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு கம்பார்ட்மெண்ட் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. மதியம் 2.30 மணி நிலவரப்படி, 50 சதவீதம் பேர் கூட தபால் வாக்களிக்க முடியவில்லை என்கிறார்கள் அரசு ஊழியர்கள்.
குறிப்பிட்ட சில சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து அதிகமான ஊழியர்கள் வந்துள்ள நிலையில், அவர்களுக்கும் ஒரே ஒரு கம்பார்ட்மெண்ட் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பயிற்சிக்கு வந்திருந்த அரசு ஊழியர்கள் நம்மிடம் பேசினர்.
''வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், நிலை அலுவலர் 1, 2, 3 என குறைந்தபட்சம் நான்கு அதிகாரிகள் பணியாற்றுவார்கள். 1,059 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் நிலை அலுவலர் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஊழியர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான பயிற்சி முகாம் நடந்து வருகிறது. சேலம் மேற்கு தொகுதியில் பணியாற்ற, மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்தும் சுமார் 1,800 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயிற்சி முகாமிற்கு வந்துள்ளனர்.
இவர்கள் தபால் முறையில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், போதிய கம்பார்ட்மெண்டுகள், வாக்குப்பெட்டிகள் வைக்கப்படாததால் குறித்த நேரத்தில் எங்களால் வாக்களிக்க முடியவில்லை.
தனித்தனியாக 5 வரிசைகளில் காலை முதல் கால்கடுக்க காத்துக்கிடக்கிறோம். மதியம் 2.30 மணி ஆகியும் எங்களில் 50 சதவீதம் பேர் கூட தபால் வாக்களிக்க முடியவில்லை. அதிகமான அரசு ஊழியர்கள் வந்துள்ள தொகுதிகளுக்கு மட்டும் வாக்களிக்க வசதியாக கூடுதல் கம்பார்ட்மெண்ட்டுகள் ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால், 5 மணிக்குள் 100 சதவீத தபால் வாக்குகள் பெறுவது என்பது கடினம்.
சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் இதேபோன்ற சிக்கல் நிலவுகிறது. தேர்தல் அதிகாரிகளே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில், தபால் வாக்குகளைக் குறைவாக பதிவுசெய்ய வேண்டும் என்பதற்காக இப்படி குறைவான கம்பார்ட்மெண்டுகளை ஒதுக்கி அலைக்கழிக்கிறார்களோ என்ற சந்தேகமும் உள்ளது'' என்றனர்.
இதுகுறித்து உடனடியாக நாம் சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராமனின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். ''இதேபோன்ற பிரச்சனை வேறு சில தொகுதிகளிலும் இருந்தது. அவை உடனடியாக சரி செய்யப்பட்டது. மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பயிற்சி முகாம் நடைபெறும் இடத்திலும் கூடுதல் கம்பார்ட்மெண்ட்களை வைக்க தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உடனடியாக அறிவுறுத்தப்படும்'' என்றார்.