ரயில்பெட்டிகளில் எல்லாம் மருத்துவ படுக்கை அறைகளாக மாற்றப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்த திட்டத்தில் ஏற்படும் சில சிக்கல்கள் குறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் நம்மிடம் விவரித்தார்.
அப்போது, கரோனா நோய் வேகமாக பரவி வருவதால், தனி வார்டுகள் தேவைகளுக்கு உதவ ரயில்வே வாரியம் 20 ஆண்டுகள் பழமையான 2500 ரயில் பெட்டிகளை 40 ஆயிரம் படுக்கைகள் கொண்ட வார்டாக மாற்றி இருக்கிறது. மேலும் 2500 பெட்டிகளை மாற்றும் முயற்சிகளும் தொடர்கிறது. ரயில்வேயின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
குளிர்சாதனம் அல்லாத இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் மாற்றப்பட்டு இருக்கின்றன. அடுத்து வரும் மூன்று மாதங்கள் கடும் கோடைக்காலம். நோயாளிகள், நோய் அறிகுறி உள்ளவர்கள், ரயில் பெட்டிகளில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை சமாளிப்பது சிரமம்.
ரயில் பெட்டிகளுக்கு மின்சார சார்ஜ் செய்யும் வசதியும், டாய்லெட்களுக்கு தண்ணீர் ஏற்றும் வசதியும் சேர்ந்து ஒரே இடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த பெட்டிகளை நிறுத்த இயலும். ஒரு ரயில்வே கோட்டத்தில் 5 முதல் 10 நிலையங்களில் மட்டுமே இத்தகைய வசதிகள் சேர்ந்து இருக்கின்றன. அதனால் குறிப்பிட்ட ஊர்களுக்கே இது பயன்படும்.
மேலும் இந்த பெட்டிகள் நிறுத்தும் ரயில் நிலையங்களை தனிமைபடுத்த வேண்டும். தற்போது சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் ரயில்கள் இயக்கவும் பரிசீலக்கப்படுகிறது. கரோனா ரயில் பெட்டிகள் பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இத்திட்டத்தை முன்கூட்டி நெறிபடுத்துவது அவசியம்" என தெரிவித்தார்.