மாநில அரசின் உரிமைகளை முதல்வர் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மாநில அளவிலான சிறுதானிய உணவு திருவிழா திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பூங்கொடி வரவேற்றார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், திண்டுக்கல் மேயர் இளமதி என முன்னிலை வகித்தனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குனர் மோகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குனர் பழனிச்சாமி திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் மாநில அளவிலான சிறுதானிய உணவு திருவிழாவில் கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்டங்களுக்கும், நுகர்வோர் அமைப்புகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள், மாநில அளவில் சிறப்பாகப் பணிபுரிந்த நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றம் சான்றிதழ்கள், சிறுதானிய விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், வக்பு வாரிய திருத்த மசோதாவில் உள்ள நிறைகுறைகளை நிச்சயமாக பார்த்து முதல்வர் கருத்துச் சொல்வார். அதற்கேற்றபடி எங்களது நடைமுறை இருக்கும். பொது சிவில் சட்டத்தைப் பொருத்த அளவில் மாநிலங்கள் தான் அமல்படுத்த வேண்டும். ஒரு மாநிலம் மட்டுமே அமல்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. மாநில அரசுக்குத் தேவையான நிதி குறித்து ஒவ்வொரு வருடமும் நான் கடிதமும் கொடுக்கிறோம். அதன் அடிப்படையில் கண்டிப்பாக வரும். மாநில அரசின் உரிமைகளை முதல்வர் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார். மக்களுக்காகத்தான் இந்த அரசு என்று முதல்வர் அரசை வழிநடத்தி வருகிறார். மக்களை பாதிக்கக் கூடிய வகையில் எந்த அறிவிப்பு வந்தாலும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். ஊரக வளர்ச்சித் துறைக்கு நிதி ஒதுக்க கோரி நமது நிதியமைச்சர் டெல்லி சென்று வந்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம். ஈரோடு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை திமுகவுக்கு வெற்றி உறுதியாகிவிட்டது” என்று கூறினார்.