சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் பேருந்து ஓட்டுநரும், அரசு ஓட்டுநரும் பேருந்தை சாலையில் நிறுத்திவிட்டு பொதுமக்கள் முன்பு தாக்கிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்குத் தினமும் அரசு மற்றும் தனியார் என மொத்தம் சுமார் 400 பேருந்துகள் வந்து செல்லும் நிலையில், பேருந்துகளை இயக்கும் நேரம் குறித்து தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் நிகழ்வது வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது.
இந்த நிலையில் ஆத்தூரிலிருந்து ஈரோடு செல்லும் தனியார் பேருந்து, பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அப்பொழுது ராசிபுரத்திலிருந்து ஆத்தூர் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் “எங்கள் நேரத்தில் நீங்கள் ஏன் பேருந்து இயக்குனீர்கள்” என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதமானது தொடர்ந்து கைகலப்பானது. இதனால் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் சாலையிலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பொதுமக்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர். இது தொடர்பாக ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.