காரைக்கால் அருகே தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சில பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் - சிதம்பரம் மார்க்கத்தைச் சேர்ந்த வள்ளிகந்தன் என்கிற தனியார் பேருந்து, பொறையார் காரைக்கால் இடையே உள்ள நண்டலாற்று பாலத்தை கடந்து வந்தபோது ஸ்டியரிங் கட்டாகி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. அதிக பயணிகளை ஏற்றி கூட்ட நெரிசலோடு வந்த அந்த பேருந்தில் இருந்தவர்களில் அதிஷ்டவசமாக காயங்களோடு தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து பின்னால் சென்று சீர்காழிக்கு வந்தடைந்த அரசுப் பேருந்து டிரைவர் ஒருவர் கூறுகையில், "வள்ளிகந்தன் நிறுவனத்திற்கு நிறைய பஸ் இந்த ரூட்டில் ஓடுது. இந்த பஸ்ஸுக்கு டைமிங் ரொம்பவே குறைவு. சிதம்பரத்திற்கும் நாகப்பட்டினத்திற்கும் சராசரியாக மூன்று மணி நேரம் பயணிக்க வேண்டும். ஆனால் இந்தப் பேருந்துகளுக்கோ இரண்டு மணி நேரம்தான் டைம். அதோடு பயணிகளை ஏற்றுவதற்காக தாறுமாறாக வண்டியை விரட்டி ஓட்டுவார்கள். அடிக்கடி இந்த பேருந்து விபத்துக்குள்ளாவது சகஜமாகிவிட்டது. அப்பாவி மக்கள்தான் இதற்கு பலியாகி வருகின்றனர் என்பது வேதனை உள்ளது. அரசுப் பேருந்து தரமாக இல்லை என்று தனியார் பேருந்துகளை நம்பி பயணிக்கின்றனர் பயணிகள். ஆனால் அங்கேயும் உயிருக்கு உத்தவாதம் இல்லாமேலேயே பயணிக்கின்றனர்" என்கிறார் வேதனையோடு.