பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டுக்கு தமிழக சட்டப்பேரவையில் இன்று (28/04/2022) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துப் பேசினார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைத்துப் பேசியுள்ளார். பெட்ரோல் மீதான வரியை ஏற்கனவே தமிழக அரசு குறைத்துள்ளது. சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது என்பதற்காக விலையை உயர்த்தாமல் இருந்தது யார்? பெட்ரோல் விலையைக் குறைப்பதுபோல நடித்து மற்றவர் மீது பழியைப் போடுவது யார் என மக்களுக்குத் தெரியும். பெட்ரோல் விலையைக் குறைத்தது யார்? ஏற்றியது யார்? என்பதை மக்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கடுமையாக வரி உயர்த்தியது" எனத் தெரிவித்தார்.