
தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் வருகிற 19ம் தேதி (நாளை மறுதினம்) முதல் 31ம் தேதி வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நாளை மறுதினம் மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் நாளை மறுதினம் சென்னை வருகிறார். பின்னர் மாலை 5:45 மணி அளவில் கேலோ விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கி விட்டு மறுநாள் ( 20ம் தேதி) பிரதமர் மோடி திருச்சி திருவரங்கம் வருகை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் வருகிற 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருவரங்கம் ரங்கநாதரை தரிசிக்க அவர் திருச்சிக்கு வருவதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு செல்கிறார். பின்னர் அங்கே தரிசனம் செய்துவிட்டு மாலையில் நேராக அயோத்தி புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகிள்ளது.
பிரதமரின் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை ஒட்டி சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த எஸ்.பி.ஜி.ஐ.ஜி. லவ் குமார் தலைமையில் சுமார் 20 பாதுகாப்பு படை அதிகாரிகள் நேற்று மதியம் சென்னை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் சென்னை பழைய விமான நிலையத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் மற்றும் திருவரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2ம் தேதி திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சி விமான நிலைய புதிய பன்னாட்டு முனைய திறப்பு விழாவில் பங்கேற்றார். இந்த நிலையில் மீண்டும் திருச்சி வருகை தர இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

அதேசமயம், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியுள்ள வீடுகளில் யார் யார் வசித்து வருகின்றனர் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.