தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஊரடங்கை ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதே நேரம் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில், தலைநகரான சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், இன்று (16.07.2021) ஆறு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். தற்போது காணொளி வாயிலாக நடைபெற்றுவரும் இந்த ஆலோசனையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஒடிசா மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களும் கரோனா தடுப்பிற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகளால் கரோனா மேலும் அதிகரிக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், ''தமிழ்நாட்டிற்கான கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. கரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவு கரோனா தடுப்பூசியே ஒதுக்கப்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு சரியான அளவில் தடுப்பூசி ஒதுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி கரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும்'' என வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது பிரதமருடனான இந்த ஆலோசனையில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.