கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சாதாரணமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி இப்போது ஏரியாவுக்கு ஏரியா, தெருவுக்கு தெரு பிரமாண்ட சிலைகளை வைத்துக் கொண்டாடுகிறார்கள். தமிழகத்திலும் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு மற்றும் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்விற்கான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் 21 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, ஆவடி, தாம்பரம் ஆணையரகங்களை சேர்த்து சுமார் 21,800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல் இந்த பணியில் 2,650 ஊர்காவல் படையினரும் ஈடுபட உள்ளனர். சென்னையில் 1,362 சிலைகளும், ஆவடியில் 503 சிலைகளும், தாம்பரத்தில் 699 சிலைகளும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் வைத்து வழிபாடு நடத்திய விநாயகர் சிலைகளை கரைக்கும் பணி நாளை நடைபெற உள்ளதால் பட்டினம்பாக்கம் கடற்கரையில் அதற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.