சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் முகாம்களில் மாலை 04.00 மணி வரை 12.74 லட்சம் பேருக்கு தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது. மூன்றாவது அலை வரக்கூடாது; வந்தால் சமாளிப்பதற்குத் தேவையான கட்டமைப்புகள் தயாராக உள்ளன. கூடுதல் படுக்கை வசதிகள், மருந்துகள் தயாராக உள்ளன. கேரள எல்லையில் தமிழ்நாடு அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.தமிழ்நாட்டில் புதிய வகை டெங்கு பாதிப்பு இல்லை; போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக முதல் தவணையாக கோவாக்சின் தடுப்பூசிப் போடப்படுவதில்லை. கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறையில் பணி வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றிய மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரேநாளில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.