சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சிந்தாமணியூரைச் சேர்ந்தவர் ஓபுளி திலீப். ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவியின் பெயர் புவனேஸ்வரி. இருவருக்கும் 2007ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 2016ல் புவனேஸ்வரி மீண்டும் கர்ப்பம் தரித்தார். தன் மனைவி மீண்டும் கருவுற்ற நாள் முதல், சேலம் மூணு சாலையில் உள்ள ஆரோக்கியா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவரான ராணியிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று வந்திருக்கிறார் திலீப்.
இதன்பிறகு சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு நேர்ந்த அனுபவங்களை துயரத்தோடு திலீப் நம்மிடம் விவரித்தார். "என் மனைவிக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. ஆனாலும், இரண்டாவது குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க முடியும் என்று மருத்துவர் ராணி நம்பிக்கையூட்டினார். அதனால் சுகப்பிரசவத்துக்குக் காத்திருந்தோம். புவனேஸ்வரியை, 5.11.2016ல் அந்த ஆரோக்கியா மருத்துவமனையில், அவர்கள் சொன்னபடி பிரசவத்திற்காக சேர்த்தேன். பிரசவ வலியை ஏற்படுத்த சில மருந்து, மாத்திரைகளைக் கொடுத்தனர். பிறகு குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, ஒருகட்டத்தில் சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்துவிட்டனர். அப்போது திடீரென்று என் மனைவிக்கு வலிப்பு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்து விட்டதாகச் சொல்லி, எங்கள் தலையில் இடியை இறக்கினார்கள். எங்களிடம் அனுமதி பெறாமலேயே அருகில் உள்ள நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனைக்கு என் மனைவியை கொண்டு சென்று அங்கும் மூளைச்சாவை உறுதிப்படுத்தினர். பின்னர் மருத்துவர் ராணியும் இறப்பை உறுதி செய்தார். அதனால் உடலைப் பெற்றுக் கொண்டு இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தோம்.
இந்நிலையில் என் மனைவி பெயரில் ஏற்கனவே இன்சூரன்ஸ் செய்திருந்ததால், கிளெய்ம் பெறுவதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், இறப்பு அறிக்கை ஆகியவற்றைக் கேட்டு மருத்துவர் ராணியை அணுகினேன். அவர் வழங்க மறுத்துவிட்டார். இதனால் மருத்துவர் ராணி மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு, இறப்பு, பிரசவத்தின்போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு ஆரோக்கியா மருத்துவமனை தரப்பு, அரசுக்கு அளித்த அறிக்கையில், கர்ப்பப்பை வெடித்ததாலும், அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதாலும் என் மனைவி இறந்து விட்டதாகச் சொல்லியிருப்பதாக எனக்குத் தெரிந்ததும், "என் மனைவியின் மரணம் குறித்தும், சிகிச்சை அளிக்கப்பட்ட முறைகள் குறித்தும்' விசாரிக்கும்படி அரசுக்கு புகார் மனுக்கள் அனுப்பினேன். மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் இரண்டு முறை தனித்தனி குழுவினர் ஆரோக்கியா மருத்துவமனையிலும், மருத்துவர் ராணியிடமும் விசாரணை நடத்தினர்.
என் மனைவியின் வயிற்றில் 3.50 கிலோ எடையில் குழந்தை இருந்ததும், அவருக்கு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், மயக்கமருந்து நிபுணர் அருகில் இல்லாமல் என் மனைவிக்கு அறுவை சிகிச்சையை ராணி செய்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்தது. இத்தனை ரிஸ்க் இருந்தும் மருத்துவர் ராணி அலட்சியமாக சிகிச்சை அளித்ததால்தான் புவனேஸ்வரி இறந்துள்ளதாக சுகாதாரத்துறை அனுப்பிய நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. என் மனைவிக்கு நேர்ந்த கதி இனி வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் நீதிமன்றத்தின் கதவைத் தட்டினேன்” எனச் சொல்லும் போதே, அவர் விழிகளில் ஈரம் திரண்டது.
இதற்கிடையே தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், 6 மாத காலத்திற்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என்று மருத்துவர் ராணிக்கு கடந்த 10.10.2018ல் தடை விதித்தது. இந்த நிலையில்தான் புவனேஸ்வரியின் மரணத்திற்கு நீதி கேட்டு திலீப், சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவர் ராணி மட்டுமின்றி, அவருடைய கணவர் மருத்துவர் அறிவுக்கரசு, மயக்க மருந்தியல் மருத்துவர் கனியமுது, நியூரோ பவுண்டேஷன் மருத்துவர் நடராஜன் ஆகியோரையும் எதிர் மனுதாரராக அதில் சேர்த்திருந்தார். கடந்த 6 ஆண்டுகளாக வழக்கு நடந்தது.
"பிரசவ வலி ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்காமலேயே மேலும் மேலும் அதிகப்படியான மாத்திரைகள், ஊசி மூலம் மருந்துகள் செலுத்தியதால் கர்ப்பப்பை வெடித்து இருக்கிறது. கர்ப்பிணியை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தி குழந்தையை மட்டும் காப்பாற்றி, தாய் இறப்பதற்கு காரணமாக இருந்துள்ளார். மயக்க மருந்து நிபுணர் இல்லாமலேயே அறுவை சிகிச்சை செய்துள்ளார்'' என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
நீதிமன்ற விசாரணையின்போது மருத்துவர் ராணி, "எனது கவனமின்மைதான் புவனேஸ்வரியின் இறப்புக்கு காரணம். அவருக்கு இருதய செயலிழப்பு ஏற்பட்டு 30 நிமிடம் கழித்துதான் மயக்க மருந்து நிபுணர் வந்து சேர்ந்தார். கர்ப்பிணியின் பனிக்குடத்தை செயற்கையாக உடைத்துவிடும் மருந்தை புவனேஸ்வரிக்கு கொடுத்ததும் உண்மைதான்'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
கடந்த 22ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், "சிகிச்சையின்போது அலட்சியமாக செயல்பட்டு கர்ப்பிணியின் மரணத்துக்கு காரணமாக அமைந்ததால் மருத்துவர் ராணி, மனுதாரருக்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற மூவர் மீதான குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுபோன்ற தகுதியற்ற கொலைகார மருத்துவர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.