சேலத்தில், பகல் நேரத்தில் காவி உடையில் சாமியார் வேடமிட்டு வீடுகளை நோட்டமிட்டு வரும் வாலிபர், இரவு நேரங்களில் வீடுகளில் திருட்டை அரங்கேற்றி வந்திருக்கும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலத்தை அடுத்துள்ள மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 62). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவருடைய மனைவி ராஜாமணி. கணவன், மனைவி இருவரும் ஜூலை 2- ஆம் தேதி காலை, தங்கள் வீட்டை பூட்டி விட்டு, பழனி முருகன் கோயிலுக்கு சென்று விட்டனர்.
கோயிலில் இருந்து மறுநாள் அதிகாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பதற்றம் அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோக்களில் வைக்கப்பட்டு இருந்த 40 பவுன் நகைகள், 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டது தெரிய வந்தது. இதைக்கண்டு தம்பதியர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சின்னசாமி காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் (பொறுப்பு) உமாசங்கர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். நிகழ்விடத்தில் பதிவாகி இருந்த விரல்ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் உதவியுடன் திருடர்களை தேடி வந்தனர்.
இதற்கென தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார். சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். தீவிர விசாரணையில், சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 33), பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த அமீர்ஜான் (வயது 34), செல்வராஜ் என்கிற சாகுல் ஹமீத் (வயது 53) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள், 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்டுள்ள மூவரில் ஒருவரான மணிகண்டன் என்பவர்தான் இந்த சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டு வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இவர் மீது ஏற்கனவே சேலம் மாநகர காவல்துறையில் 2 கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி, ஆள் கடத்தல், கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. நாமக்கல், ஈரோடு, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மணிகண்டன் மீது திருட்டு வழக்குகள் உள்ளிட்ட 30 வழக்குகள் விசாரணையில் உள்ளன. மணிகண்டனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்தன.
மணிகண்டனை குற்ற வழக்குகள் தொடர்பாக பல்வேறு மாவட்ட காவல்துறையினர் நீண்ட காலமாக வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களுக்கு போக்குக் காட்டுவதற்காக பகல் நேரங்களில் காவி வேட்டி அணிந்து கொண்டும், கழுத்தில் நான்கைந்து ருத்ராட்ச மாலைகள், நெற்றியில் பட்டையாக விபூதி, திருநீறு அணிந்து கொண்டும், கையில் பல்வேறு நிறங்களில் மந்திரித்த கயிறுகளைக் கொண்டும் சாமியார் வேடமிட்டு சுற்றி வந்திருப்பது தெரிய வந்தது. தனக்கு பணத்தேவை ஏற்படும்போது, இரவு நேரங்களில் வீடுகளில் திருடி வந்துள்ளார்.
சேலத்தை அடுத்த அயோத்தியாபட்டணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததும், அங்கு தனது காதலியை வரவழைத்து அவருடன் நெருக்கமாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. சாமியார் வேடம் போட்டிருந்ததால், அவர் மீது யாருக்கும் எளிதில் சந்தேகம் வராததோடு, நல்ல அபிமானத்தையும் கொடுத்துள்ளது. அதேநேரம், எந்தெந்த வீடுகள் நீண்ட நாள்களாக பூட்டிக் கிடக்கிறது?, வயதானவர்கள் வசிக்கும் வீடுகள் குறித்தெல்லாம் நோட்டமிட்டு வரவும் சாமியார் வேடம் பெரிதும் உதவியிருக்கிறது.
நீண்ட நாள்களாக பூட்டி இருக்கும் வீடுகள், முதியோர் வசிக்கும் வீடுகளாக பார்த்து அவர் தனது கூட்டாளிகளுடன் இரவு நேரத்தில் சென்று திருடி வந்துள்ளார். திருடிய பணம், நகைகளைக் கொண்டு அவர் பெண்களுடன் தனிமையில் இருந்துள்ளார். பிடிபட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.