தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இந்த சூழலில், மின் கட்டணங்களை நுகர்வோரே கணக்கிட்டுச் செலுத்தலாம், மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதி நீட்டிப்பு போன்ற பல அறிவிப்புகளை மின்சாரத்துறை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மின்தடை ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்து வந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மின் பராமரிப்பு பணிகளை ஒத்திவைப்பதாகத் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
மேலும், "ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து பணியாற்றுவோர் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத் தொடர்ச்சியாக மின் வினியோகம் இருக்கும். அதேபோல் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதாலும் ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது. கடந்த ஆறு மாதங்களாகப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையிலும், ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளுக்கான மின்தடை ஏற்படாதவாறு அப்பணிகள் ஒத்திவைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தவிர்க்க முடியாத மின் பராமரிப்பு பணிகள் மட்டுமே போர்க்கால அடிப்படையில் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.