மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் பல ஆயிரக் கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்றுடன் 22வது நாளாக நீடித்து வருகிறது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் காலி இடத்தில், சென்ற 14ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அவர்களது போராட்டம் 17 -ஆம் தேதியான இன்றுடன் 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் துளசிமணி, சுப்பு, பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்து வழி நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் முத்துசாமி, கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், பெண்கள் எனத் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இன்று இந்தப் போராட்டக் களத்தில் டெல்லி போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு சுடர் ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அகல் விளக்கு ஏந்தி உயிர் நீத்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலியும் செலுத்தினார்கள். பிறகு போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து 4-வது நாளாக காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.