தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரத்தில் விவசாயத்திற்கு அடுத்த பிரதானமான தொழில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி. இந்நகரில் மட்டும் சுமார் 5 ஆயிரம் விசைத்தறிகள் நைஸ் ரக ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டு வருவதால் இதன் மூலம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் சுமார் 25 ஆயிரம் நெசவாளர் குடும்பங்களின் ஜீவாதாரம் பிணைந்திருக்கிறது.
இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் ஈரோடு, சேலம், கோவை, விருதுநகர், நாமக்கல், மதுரை, தேனி என்று பல்வேறு மாவட்டங்களிலும், விசைத்தறிகள் பல்லாயிரக்கணக்கில் இயங்கி வருகின்றன. குறிப்பாக தற்சார்பு என்று சொல்லப்படும் சுயவேலைவாய்ப்புகளின் ஊக்கியாகவே மாறிய தொழில்நுட்பம். ஆண்டாண்டு கால வழக்கம் போன்று இயங்கிவந்த இத்தொழில், அண்மைக்காலமாக இதன் மூலப்பொருளான நூல்களின் விலை, கட்டு ஒன்றுக்கு முன்னெப்போதுமில்லாத வகையில் ரூ.395 என்று அபரிமிதமாக உயர்த்தப்பட்டதுதான் தொழிலையே ஆட்டம் காண வைத்து, ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.
இப்படி கடுமையான பாதிப்பைச் சந்தித்த ஜவுளி உற்பத்தி நெசவாளர்களின் தொழில் ஆதாரத்தில் ஏற்பட்ட இந்த முட்டுக்கட்டை காரணமாக, கடந்த 22ஆம் தேதியன்று சங்கரன்கோவிலின் அனைத்து விசைத்தறி கூடங்களும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த செய்திகளை ‘நக்கீரன்’ இணையதளம் தொடர்ந்து வெளியிட்டு, மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றது. இதனிடையே இதற்கான நடவடிக்கைகளின் அறிகுறிகள் தென்படாத நிலையில், சங்கரன்கோவில் விசைத்தறி நெசவாளர்கள் இன்று (28.01.2021) முதல் ஒருவார காலம் தொடர் வேலை நிறுத்தம் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இதனை நம்பியுள்ள 25 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பிரச்சனைக்குரியதாகியிருக்கிறது. மேலும் இந்த வேலை முடக்கத்தில் சங்கரன்கோவில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன், திருமுருகன் விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம், சங்கரன்கோவில் ஜவுளி உற்பத்தி குழு சங்கங்கள், சி.ஐ.டி.யு, தொ.மு.க., ஐ.என்.டி.யு.சி, பி.எம்.எஸ். என்று அனைத்துச் சங்கங்களும் கைக்கோர்த்திருப்பது கவனிக்கத்தக்கது.
“தாங்கமுடியாத அளவிலான அபரிமிதமான நூல் விலையேற்றம், மாதம் ஒன்றுக்கு 9.50 கோடி நூல் கொள்முதல் செய்யப்பட்டு, 19.98 கோடியளவு உற்பத்தி செய்கிற நாங்கள், கொள்முதல் நூலின் மூலமாக 45.50 லட்சங்கள், ஜவுளி உற்பத்தியின் மூலமாக சுமார் ஒரு கோடி என இரண்டு வழிகளில் அரசுக்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்துகிறோம். ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி ஏற்றம், செலுத்திய ஜி.எஸ்.டி. வரியின் ரீஃபண்ட் கிடைக்காமல் திண்டாடுவதோடு இந்த நூல் விலையேற்றம் பெருத்த இடியாக இறங்கியிருக்கிறது.
ஏறத்தாழ தொழிலே நலிவடையும் நிலை. மத்திய மாநில அரசுகள் இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான எங்களின் கோரிக்கையாகவே இந்தக் கட்டாய முடக்கம் செய்ய நேரிட்டுள்ளது. நடவடிக்கை எட்டப்படாத பட்சத்தில் நிரந்தர தொழில் முடக்கம் தவிர வேறு பாதையில்லை,” என்கிறார் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சுப்பிரமணியம்.