மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ள நிலையில் சென்னை வந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து திடீரென அமித்ஷா வந்திருந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டதால் அங்கிருந்த பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகர் கரு.நாகராஜன், ''மத்திய அமைச்சருக்கு எவ்வளவோ அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. அந்த அச்சுறுத்தல்களை எல்லாம் எதிர்க்கக்கூடிய மாவீரன் அமித்ஷா. தமிழக மண்ணில் பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுகிறது. என்.ஐ.ஏ நாடு முழுவதும் நூறு பேரை கைது செய்தால் அதில் 40 பேர் தமிழகத்தில் கைது செய்யும் நிலைமையில் தான் தமிழகம் இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது உச்சகட்ட பாதுகாப்பு உடைய தலைவர் வரும்போது மின்சார வயரை துண்டிக்கிறார்களோ அல்லது மின் இணைப்பை துண்டிக்கிறார்களோ தெரியாது அவர் வருகின்ற பொழுது இங்க இருக்கக்கூடிய அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற இருட்டான நிலையை இந்த மவுண்ட் ரோட்டுக்கு ஏற்படுத்தலாமா? அவர் இருட்டில் இறங்கி நடந்து செல்கிறார். இருட்டைக் கண்டு பயந்து ஓடுவேன் என்று அவர் ஓடவில்லை. கைது செய்ய வரும் பொழுது ஐயோ ஐயோ என்று கத்தும் தலைவர் அல்ல அவர். இது மிகப்பெரிய தவறு தமிழக அரசை கண்டிக்கிறோம்'' என்றார்.