தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில், தூத்துக்குடிக்கு நாளை (11.11.2020 ) வரும் முதல்வருக்கு எதிராக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த போஸ்டரில்,
தூத்துக்குடியில் காவல் துறையால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வராத முதல்வர் எடப்பாடியே...சாத்தான் குளத்தில் அப்பா/மகன் காவல்துறையின் சித்தரவதையில் படுகொலை செய்யப்பட்டபோது ஆறுதல் கூற வராத முதல்வர் எடப்பாடியே...
சொக்கன் குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதி தருவதாக வாக்குறுதி தந்து இன்று வரை நிறைவேற்றாத முதல்வர் எடப்பாடியே...
எந்த முகத்துடன் தூத்துக்குடிக்கு வருகிறீர்கள்??? - என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியிருக்கிறது தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக !
இந்த போஸ்டர்கள் தற்போது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்த, மாவட்ட அதிமுகவினர் கொந்தளிக்கத் துவங்கியுள்ளனர். இதற்கிடையே, இந்த போஸ்டர் விவகாரத்தை எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள் அதிமுகவினர். போஸ்டர்களை கிழித்தெறிய மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவு பறந்திருக்கிறது.