கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு நாளை நடைபெறவிருந்த நிலையில் அதற்கு தடைக்கோரி மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை அவசர வழக்காக ஏற்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளை தேர்வினை நடத்தலாம் ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதே சமயம் தமிழ் மொழியில் தேர்வு நடத்தப்படாதது குறித்து மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரையை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசிர்வாதம் தொடுத்திருந்த மனுவில், பொதுத்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள்கள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தபால் துறையில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்நிலையில் கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான அறிவிப்பை தபால்துறை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது.
இதற்கான தேர்வுகள் நாளை நடைபெற இருக்கின்ற நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் இனிவரும் காலங்களில் அஞ்சல் தேர்வுகள் அனைத்தும், அஞ்சல் துறை தேர்வு வினாக்கள் அனைத்தும் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே இருக்கும். இரண்டாம் தாளுக்கான தேர்வு அந்தந்த மாநில மொழிகளில் நடைபெறும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அஞ்சல் துறைகளுக்கான தேர்வு தமிழகத்தில் நடைபெற்ற பொழுது ஹரியானா, பீகார் உள்ளிட்ட வட மாநில மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். குறிப்பாக தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கடைசி நேரத்தில் மத்திய அரசு தேர்வுக்கான வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாளை நடைபெற உள்ள கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான தேர்வுக்கு இடைக்கால தடை விதிப்பதோடு பழைய முறைப்படியே தேர்வு நடத்துவதற்கு புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்ற நீதிபதி இரவிச்சந்திரன் அமர்வு தேர்வினை எழுதலாம் ஆனால் தேர்வு முடிவை வெளியிட கூடாது எனவும், தமிழ் மொழியில் தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியிடப்படாதது குறித்து மத்திய அரசு அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருக்கிறார்கள்.