Skip to main content

தபால் நிலையத்தில் பட்டப்பகலில் கொள்ளை... 3 பேர் கைது!

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

 Post office robbery in broad daylight ... 3 arrested!

 

விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் கடந்த ஜூலை 15ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுக்கு சில்லறைக் கேட்டு உள்ளே நுழைந்த மூன்று நபர்கள் நூதன முறையில் ஊழியர்களை ஏமாற்றி அங்கிருந்த கருவூலத்திலிருந்த பணம் இரண்டு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை பிடிப்பதற்காகத் தீவிரமாக தேடி வந்தனர். தபால் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதித்ததில் கொள்ளையர்கள் காரில் வந்தது தெரிய வந்தது.

 

அந்த கார் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னையில் திருட்டு வழக்கில் சிக்கிய ஒரு கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரம் தபால் நிலையத்தில் கூட்டு சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஷியாவல் (20),  சையிதி  (28), டெல்லி நிஜாமுதீன் பகுதியை சேர்ந்த யூனஸ் அலிபனா (56) ஆகியோர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்கள் 3 பேரும் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டு ஏற்கனவே புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் தபால் நிலையத்தின் திருட்டு வழக்கில் அவர்கள் ஈடுபட்டது குறித்து சென்னை போலீசார் விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து விழுப்புரம் டவுன் போலீசார் மேற்படி மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை முடித்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வெளிநாட்டை சேர்ந்த இருவர் டெல்லியை சேர்ந்த ஒருவர் என மூவர் தபால் நிலையத்திற்குள் புகுந்து அங்கிருப்பவர்களை திசைதிருப்பி பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்