Skip to main content

பிரபல மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி அல்லி!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021
popular Neurologist Case: Judge Allie Postpones Judgment

 

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தீர்ப்பை ஆகஸ்ட் 4 ம் தேதி தள்ளிவைத்தது சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம். கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார்.  தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், அரசுப் பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில்,  வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன்  ஆகிய 10 பேரை கைது செய்தனர். வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டார். 

 

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது.  அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண லக்ஸ்மனராஜு, ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.  

 

சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பினை ஜூலை 28 ஆம் தேதி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளிவைத்து, ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிவிப்பதாகத் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தீர்ப்புக்காக வந்தது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட  மேரிபுஷ்பம், பொன்னுசாமி ஆகியோர் உடல் நிலை சரியில்லாததால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அவரின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 4 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்து வழக்கைத் தள்ளிவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்