மதுரை மற்றும் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் உரிமை முழக்க மாநாடு
நமது இந்திய அரசியல் சாசன சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. தற்போது ஆளும் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு குடிமக்களுக்கு சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கக்கூடிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. ஒருவர் எந்த உணவை உண்ண வேண்டும் என மத்திய அரசு தீர்மானிக்கும் நிலையை நாம் பார்த்து வருகின்றோம். அரசின் மக்கள் விரோத கொள்கை முடிவுகளை விமர்சிப்பது தேச துரோக குற்றமாக பிரச்சாரம் செய்யப்பட்டு கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் பா.ஜ.க மற்றும் சங்பரிவார அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க மற்றும் RSS-ன் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சிக்ககூடியவர்கள் மிரட்டப்படுவதும், கைதுசெய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தேசத்தில் தொடர்கதையாக மாறியுள்ளது. இவர்களை விமர்சனம் செய்யக்கூடிய இயக்கங்களை முடக்கக்கூடிய ஜனநாயக படுகொலையையும் இந்த அரசு நிகழ்த்தி வருகின்றது. ஒருவர் எந்தமதத்தையும் பின்பற்றலாம் என அரசியல் அமைப்பு சாசன சட்டம் உரிமை வழங்கியுள்ள நிலையில் மதம்மாறி திருமணம் செய்வது தேசதுரோக குற்றமாக சித்தரிக்ககூடிய வேலையை தற்பொழுது மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. அரசியல் அமைப்பு சாசனசட்டம் குடிமக்களுக்கு வழங்கிய உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டித்தும், இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் வரும் அக்டோபர் மாதம் 07-ம்தேதி மதுரையிலும், 08-ம் தேதி சென்னையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சங்கமிக்கும் உரிமை முழக்க மாநாட்டை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளோம். அனைத்து தரப்பு மக்களும் இந்த மாநாட்டில் பங்கெடுத்து இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டம் வழங்கிய உரிமையை பாதுகாக்க கரம் கோர்க்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
1. வக்புவாரியம் முறைபடுத்தப்பட்டு வக்புவாரிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்!
முஸ்லிம் தனவந்தர்கள் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தங்களுடைய கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை தானமாக வக்பு செய்தனர். இந்த சொத்துக்களை முறைப்படி பராமரித்து முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கும்,மேம்பாட்டிற்கும் பயன்படுத்துவதற்காக வக்பு வாரியம் அரசால் ஏற்படுத்தப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கு பயன்பட வேண்டிய வக்பு சொத்துக்கள் இன்று அரசியல் வாதிகள்,ரவுடிகள் மற்றும் சுயநல வாதிகளுக்கு மட்டுமே பயன்பட்டு வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் அரசால் இயக்கப்படும் வக்பு வாரியம் முறைப்படுத்தப்படாமல் இருப்பதே ஆகும். அரசியல் தலையீடுகள் இல்லாமல் தகுதியான நபர்களை கொண்டு வக்பு வாரியம் செயல்படுத்தப்பட வேண்டும்,போதுமான அளவு ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்,ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை மீட்க தமிழக அரசு உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுகொள்கின்றது
2. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்!
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் காவிரிமேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும், விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக போராடி வருகின்றனர். மத்திய பா.ஜ.க. அரசின் கார்ப்பரேட் நல கொள்கைகள் மூலம் கடுமையான பாதிப்புகளையும் நஷ்டங்களையும் அடைந்துவருகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நம்பி முதலில் போராட்டத்தை முடித்துக்கொண்ட விவசாயிகள் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவுடன் மீண்டும் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது நடந்துவரும் போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் மத்திய அரசு முடக்க நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. போராடும் விவசாயிகளை இதுவரை சந்திப்பதற்கு கூட நேரம் ஒதுக்காமல் பிரதமர் மோடி செயல்பட்டுவருகின்றார். தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசாங்கம் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
3. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்!
நமது தேசம் கூட்டாட்சி முறை கொண்ட தேசமாகும். மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் தெளிவாக சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போது ஆளும் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய பல்வேறு அதிகாரங்களை பறிக்கும் முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. இதன் மூலம் அதிகாரம் ஒரே இடத்தில் குவியும் அபாயம் தேசத்தில் ஏற்பட்டுள்ளது. பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றப்பட்டு மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும், மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை பறிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட்டு தேசத்தின் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் மத்திய அரசை கேட்டுக்கொள்கின்றது.
இதில் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது, மாநில பொருளாளர் வழக்கறிஞர் N.M.ஷாஜஹான், மாநில செயற்குழு உறுப்பினர் S.P. முகம்மது நஸ்ருதீன் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் S.இல்யாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.