சமீப காலமாக புதிதாக அமைக்கப்படும் சாலைகள், பாலங்கள் எல்லாம் தரமற்றநிலையில் உள்ளதாக தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகிறார்கள் மக்கள். உள்ளூர் இளைஞர்கள் அதை படங்கள், வீடியோக்களாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம் கீழாத்தூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. ஆல்ஃப் பாயிலில் பெப்பர் போட்டது போல தார் கலவை ஜல்லியை கொட்டி மட்டம் செய்துவிட்டு சென்ற அடுத்த 2 நாளில் சாலையில் புல் முளைத்திருந்தது. அதைப் பார்த்த இளைஞர்கள் தரமற்ற சாலையால் புல் முளைத்துவிட்டது என்று சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். பத்திரிகை, தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வந்து பரபரப்பானது. அதைப் பார்த்த அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துவிட்டு ஒப்பந்தக்காரரிடம் ரகசியமாக பேசிவிட்டு சென்றுவிட்டனர்.
இதைப் பார்த்த இளைஞர்கள் சாலையில் மறுபடியும் சீரமைப்பு செய்யப் போகிறார்கள் என்று காத்திருந்தனர். ஆனால் நடந்து வேறு விநோதமாக இருந்தது. புல் முளைத்திருந்த இடங்களில் வயலில் புல்லை அழிக்க பயன்படுத்தும் களைக் கொல்லி விஷத்தை புதிய தார் சாலையில் முளைத்திருந்த புல்லின் மேல் மருந்து தெளிக்கும் ஸ்பிரேயர் மூலமாக தெளித்து புல்லை பட்டுப்போக வைத்துள்ளனர். இதைப்பார்த்து வேதனையோடு சிரித்த இளைஞர்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால் புல்லை அழிக்க களைக்கொல்லி வாங்கி கொடுத்துட்டு போறாங்க.
இந்த ரோட்ல இன்னும் கொஞ்ச நாள்ல எல்லா ஜல்லியும் பெயர்ந்து வெளியே வந்துடும். அப்ப அதனை தரையோடு ஒட்ட ஃபெவிக்கால் வாங்கிக் கொடுங்ய்யா... ஒப்பந்தக்காரர் வந்து கல்லை ஒட்டி வச்சுட்டுப் போகட்டும் என்று வேதனைச் சிரிப்போடு பேசிக் கொண்டனர். தரமற்ற சாலைகள் அமைக்க எத்தனை லஞ்சமோ..