மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பகதூர் என்ற பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. அதேபோன்று இந்த வழக்கு சம்பந்தமான சாட்சிகளிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்த வழக்கில் 8வது நபராகச் சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, 9வது நபராகச் சேர்க்கப்பட்டுள்ள மனோஜ் என்கிற சாமி ஆகியோர் இன்று (22.09.2021) விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். இவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். வழக்கில் தொடர்புடைய கனகராஜ் கொள்ளை திட்டம் குறித்து சயானிடம் தெரிவித்த நிலையில், சயான் தனக்கு ஏற்கனவே அறிமுகமான கோவில் பூசாரி மனோஜ் சாமியிடம் கனகராஜை கூட்டிச் செல்கிறார். அப்போது சயானும், கனகராஜும் மனோஜ் சாமியிடம் கொள்ளை திட்டத்தை விவரித்துள்ளனர். இதனை அறிந்துகொண்ட மனோஜ் சாமி அவருக்குத் தெரிந்த மற்றொரு கோவில் பூசாரியான சந்தோஷ் சாமியிடம் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது இந்தக் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்த சில தடைகள் இருப்பதாகவும் இதற்கு சில பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் கூறியதாகவும் கூறப்படுகிறது. சொன்னபடி சில பூஜைகள் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கொள்ளை வழக்கில், வாகனங்கள் மற்றும் ஆட்களை ஏற்பாடு செய்வதில் இருவருக்கும் தொடர்புள்ளதாகப் புகார் உள்ளது. குறிப்பாக சந்தோஷ் சாமி, இந்தக் கொள்ளைக்கு 5 பேரை ஏற்பாடு செய்துள்ளார். தற்போது கனகராஜ் உயிரோடு இல்லாத நிலையில், இந்த இருவரின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதேபோல் கொள்ளை சம்பவம் நடைபெற்ற 2017 ஏப்ரல் மாதம் 23ஆம் தேதிக்கு ஒருநாள் முன்பு இருவரும் கோவை வந்துள்ளனர். கொடநாடு கொள்ளை வழக்கில் கொடநாட்டின் 8வது எண் கொண்ட நுழைவு கேட்டில் இருந்த காவலாளி கிருஷ்ணதபாவை கட்டிப்போட்டுக் கண்காணித்த 4 பேரில் இவர்கள் இருவரும் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.