திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை மற்றும் கோயிலிலுள்ள பழங்காலப் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், இதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 2012ஆம் ஆண்டில் ஆகம விதிகளுக்குட்பட்டு ஸ்ரீரங்கம் கோயில் சீரமைப்பு பணிகளின்போது சிலைகள் சீரமைக்கப்பட்டன. ஆனால் சிலைகள் மாயமானதாகக் கூறும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும், அனைத்துச் சிலைகளும் கோயிலில் இருக்கின்றன என்றும் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதியிலிருந்து 3 நாட்களுக்குப் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கான முறையான விளக்கத்தைக் கோயில் நிர்வாகம் அளிக்க வேண்டும் என்று ரெங்கராஜன் நரசிம்மன் சார்பில் கூறப்பட்டது. ஆகம விதிகளுக்குட்பட்டு தான் அதிகாரிகள் கோயிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும், கடவுளுக்கும் தனிமனித சுதந்திரம் இருக்கிறது என்றும், கோயில் நிர்வாகம் சார்பில் இதற்குப் பதிலளிக்கப்பட்டது. பாரம்பரியக் கட்டடத்தைச் சிறப்பாகப் புதுப்பித்ததற்காக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு 2017ஆம் ஆண்டு யுனெஸ்கோ விருது வழங்கியிருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைக் கடத்தல் புகார் மற்றும் ஆயிரம் கால் மண்டபம் தொடர்பாக ஆய்வு செய்து 6 வாரக் காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரணை தொடங்க உள்ள நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும் டிவிஎஸ் நிறுவன தலைவருமான வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையில், வேணு சீனிவாசனை 6 வார காலத்திற்கு கைது செய்ய மாட்டோம் என சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு பதில் மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கோவில் சிலை மாயம் குறித்து புகார் கொடுத்த ரெங்கராஜன் நரசிம்மன், 13.10.2017ல் நான் கொடுத்த புகாருக்கு 16.10.2017 அன்று வரை எனக்கு CSR கொடுக்காமல், 13.10.2017 அன்றே எனக்கு CSR கொடுக்கப்பட்டதாக காவல் துறை கொடுத்த அறிக்கையை அறநிலையத்துறை எப்படி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது ? ஒருவருக்கு ஒரு CSR கொடுத்தால் அதை பெற்றுக்கொண்டேன் என்று அவர் கையெழுத்து இடவேண்டுமே!!
இது போல் பலமுறை நான் புகார் கொடுத்தபோது என் கையெழுத்தைப் பெற்றுக் கொண்ட காவல் நிலையம் ஏன் இதில் கையெழுத்து வாங்கவில்லை நான் பொய் சொல்கிறேன் என்றால், நான் கையெழுத்து பொட்ட ஆவணத்தை ஏன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை? அப்படி பொய் சொன்னதற்காக என்மீது ஏன் வழக்கு தொடுக்கவில்லை?
நான் கொடுத்த புகார் எனது பிரமாணப் பத்திரம். பிரமாணப் பத்திரத்தில் கொடுத்ததை சமூக வலைத்தளங்களில் கொடுக்க எனக்கு பூரண சுதந்திரம் உண்டு. அது அவதூறு ஆகாது. ஏன் என்றால், அவதூறு என்றால் என்ன என்று தெளிவாகச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது ஆவணங்களில் இருப்பதைச் சொல்வது அவதூறு ஆகாது. எப்பொழுது நான் ஒரு புகாரை காவல் நிலையத்தில் கொடுத்தேனோ அப்பொழுதே அது பொது ஆவணமாகிவிட்டது என்கிறார்.
இதற்கிடையில், பொன்.மாணிக்கவேல் நாளை காலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முதற்கட்ட விசாரணைக்கு வருகிறார். கோவிலுக்கு என்று உள்ள ஆகம விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது என்றாலும் பொன்.மாணிக்கவேலின் அதிரடி விசாரணைக்கு ஸ்ரீரங்க அதிகாரிகள் மத்தியில் பெரிய கிலியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று 12.08.2018 திருச்சியின் முன்னாள் கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்துள்ளார். ஏற்கனவே அந்த 2012 ஆண்டு கோவில் சீரமைப்பு நடைபெற்ற போது கலெக்டராக இருந்தவர் ஜெயஸ்ரீமுரளிதரன் என்பது குறிப்பிட்டதக்கது. ஸ்ரீரங்கம் கோவில் சீரமைப்பு நடைபெற்ற காலத்தில் தினமும் நாள் தவறாமல் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆஜா் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.