![eps](http://image.nakkheeran.in/cdn/farfuture/BN_kys4KYW2K6ymHtrMFg0ajbZKTbsVEMA7Ld9I8B-w/1547887350/sites/default/files/inline-images/z356.jpg)
சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. எம்ஜிஆர் செய்த சேவையால் மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் நிற்கிறார் என்று புகழாரம் சூட்டினார். தன் மீது கோடநாடு விவகாரத்தில் பொய் குற்றச்சாட்டு கூறபடுவதாக கூறிய அவர் முதலமைச்சருக்கு எதிராகவே பொய் பிரச்சாரம் செய்யும் திமுக ஆளும்கட்சியாக இருந்தால் மக்களை எப்படி நடத்தும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். மேலும் அவர் பேசுகையில்,
என் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். வேண்டும் என்றே திட்டமிட்டு சதி செய்கின்றனர். இதற்கெல்லாம் பின்புலம் திராவிட முன்னேற்ற கழகம்தான். அதற்கு ஸ்டாலின் குரல் கொடுக்கிறார், துணை நிற்கிறார். கேரளாவில் சயான் காரை ஓட்டிக் கொண்டு உறவினரை பார்ப்பதற்காக சென்றார். அப்போது நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியது. அந்த விபத்தில் அவரது மனைவியும், மகளும் இறந்துவிட்டனர். விபத்தில் காயமடைந்த சயானை காப்பாற்றிக் கொண்டு வந்தது அம்மா அரசுதான். அதுமட்டுமின்றி இந்த கோடநாடு திருட்டை கண்டுபிடித்ததும் அம்மாவின் அரசுதான் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
இந்த கொலை சம்பவம் நடந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. இந்த இரண்டு வருடத்தில் 22 முறை நீதிமன்றத்திற்கு சென்றனர். மாஜிஸ்திரேட் முதலில் என்ன என்று கேட்டிருப்பார்கள் அப்போது சொல்லி இருக்கலாம் அல்லவா. அதற்கு பிறகு குற்றப்பத்திரிக்கை கொடுக்கிறார்கள் அப்போது தப்பு இருந்தால் சொல்லியிருக்கலாம்.செசன்ஸ் கோர்ட்டில் பலமுறை ஆஜரான போது சொல்லி இருக்கலாம் ஆனால் இந்த குற்றச்சாட்டை சொல்லவில்லை.
எதுவுமே செய்ய முடியவில்லை என்று வருகின்ற பொழுது தற்போது இந்த குற்றச்சாட்டை சொல்கிறார்கள். எனக்கு முன் பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பேசியது போல பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வெளியிட்டதற்காக, பொங்கல் பரிசு கொடுத்ததற்காக பொறுக்கமுடியாமல் இப்படிப்பட்ட ஒன்றை ஜோடித்து பார்க்கிறார்கள் என்றார்.