பொங்கல் பரிசுத் தொகை குடும்பங்களுக்கு வழங்கப்படுவதால், மாற்றுத் திறனாளிகள் 25 சதவீதம் கூடுதல் தொகை கோர முடியாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன் அடிப்படையில் கடந்த 21- ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, பொங்கல் பரிசுத் தொகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீதம் கூடுதலாக வழங்கக் கோரி, தமிழ்நாடு அனைத்துவிதமான மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்புராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘கடந்த 2016- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் வழங்கப்படும் தொகைகளில், 25 சதவீதம் கூடுதலாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2019- ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்ட போதும், 25 சதவீதம் கூடுதலாக வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கில், எங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பொங்கல் பரிசு என்பது திட்டமல்ல எனக் கூறி, எங்கள் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது. திட்டமில்லாமல் பரிசுத் தொகை வழங்க முடியாது என்பதால், பொங்கல் பரிசில் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீதம் கூடுதல் தொகையை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்.’ எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ‘பொங்கல் பரிசு குடும்பத்துக்கு வழங்கப்படுகிறதே தவிர, தனி நபர்களுக்கு அல்ல என்பதால், மாற்றுத் திறனாளிகள் சட்டப்பிரிவு இத்திட்டத்துக்குப் பொருந்தாது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையாக 33 கோடி ரூபாய் வினியோகிக்கப்படுகிறது. 455 கோடி ரூபாய் மதிப்பில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.’ என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 5- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.