புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கரம்பக்காடு கிராமத்தில் அந்த கிராமத்து மக்களுடன் மக்கள் பாதை இயக்கமும் இணைந்து பொங்கல் விழா திறந்த வெளியில் நடந்தது. விழாவில் புயலில் சாய்ந்த தென்னை மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. விழாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கலந்து கொண்டு புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தென்னங் கன்று, கரும்பு மற்றும் பொங்கல் பொருட்களை வழங்கினார். மேலும் புயல் நேரத்தில் சிறப்பாக களப்பணி செய்த இளைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
மேலும் சகாயம் பேசியதாவது.. நாட்டு மக்கள் அனைவரும் வேறுபாடின்றி நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்று தான் போராடி நம் முன்னோர்கள் நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தார்கள். ஆனால், சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும்கூட இன்னும் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் வறுமையோடும், வெறுமையோடும் ஒரு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கஜா புயலானது மேலும் நெருக்கடியைக் கொடுத்து, விவசாயிகளை நிலை குழைய வைத்துள்ளது.
நம் நாடானது, நகர் புறத்தில் ஒரு இந்தியாவும், கிராமப் புறத்தில் ஒரு இந்தியாவுமாக உள்ளது. மேலும், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடும் உள்ளது. மேலும், விவசாயிக்கும் அலுவலருக்கும் இடையே உள்ள வருமான வேறுபாடு இருக்கக்கூடாது. இத்தகை. வேறுபாடுகள் அதிகரித்து வருவது சுதந்திரத்துக்காக தியாகம் செய்த நம் முன்னோர்களின் கனவை பொய்யாக்கும் விதமாக அமைந்துள்ளது.
புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு என்னை வருமாறு நண்பர்கள் அழைத்தார்கள். வந்தால் விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக எதையாவது செய்ய வேண்டும். ஆனால், நான் அதிகாரம் குறைந்த மக்களுக்கு நேரடியாக எதையும் செய்ய முடியாத பதவியில் இருப்பதால் நான் வரவில்லை. ஆனால் நண்பர்களை களத்துக்கு அனுப்பி வைத்தேன்.
கிராமங்கள்தான் நம் நாட்டின் அடித்தளம். எனவேதான், இந்த நாட்டின் வளர்ச்சியை தலைநகரான டெல்லியைப் பார்த்தோ, வர்த்தக மையமான மும்பையை பார்த்தோ மதிப்பிட முடியாது. மாறாக, கிராமங்களை வைத்துதான் மதிப்பிட வேண்டும்.
விவசாயிகள் தங்களது விளை பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றினால்தான் அதிகமான வருமானம் கிடைக்கும். விவசாயிகளின் முன்னேற்றம் நம் ஒவ்வொருவரின் முன்னேற்றம் என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது:
புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் விளை பொருட்களை பெற்று அதில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்டகால நடவடிக்கைகள் குறித்து மக்கள் பாதை எனும் அமைப்பின் வாயிலாக அரசுக்கு ஆலோசனை கூறுவதோடு கோரிக்கைகளையும் தெரிவிக்கும். லஞ்சம், ஊழலினால் தமிழ் சமூகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கருதுகிறேன். எனவே, இதை சட்ட ரீதியாக ஒழிக்க வேண்டியது அரசு ஊழியர்களின் கடமை என்பதால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.
விழாவில் கலை நிகழச்சிகளும் நடத்தப்பட்டது. விழாவில் குருகுலம் சிவநேசன் வரவேற்றார். நமது நண்பர்கள் விவசாய மீட்புக்குழு நெவளிநாதன் நன்றி கூறினார். அட்மா காமராஜ், மக்கள் பாதை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழா மேடையில் தென்னை மரங்களின் கழிவகளாக ஒதுக்கப்பட்ட அடி மற்றும் நுணி பகுதியில் இருந்து தயாரிக்கப்பட்ட இருக்கை மற்றும் மேஜைகளை ஆச்சர்யத்துடன் பார்த்த சகாயம் ஐ.ஏ.எஸ்.. இது போல தான் தான் விவசாய பொருட்களை மதிப்பு கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம் என்றவர் இந்த இருக்கைகள் அதிக எடையுள்ளதாக உள்ளது. அதனால் வாங்கி செல்பவர்கள் சிரமப்படும் நிலை உள்ளது. அதனால் எடை குறைந்த அளவில் தென்னை மர இருக்கை மற்றும் மேஜைகள் தயாரிக்க முயற்சி செய்யுங்கள் என்றார்.